Skip to content

திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு காட்டூர் அண்ணாநகர் பகுதியில் நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு காட்டூர் அண்ணா நகர் ராஜவீதி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இந்த ராஜவீதியானது காட்டூர்-காமராஜர்நகர் பகுதியை இணைக்கும் பிரதான வீதியாக உள்ளது. இங்கு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் சுமார் ஒன்றரை வருட ஆண்டு காலமாக பாதாள சாக்கடை பணியானது இங்கு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க கோரி மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் மந்த நிலையிலேயே பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருப்பதால் அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர இயலாத நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் பெரியவர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத அவலநிலை உள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி திமுக வார்டு கவுன்சிலர் தாஜூதீனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு குடிநீர், வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தி கேள்வி எழுப்பினர். இதில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக வார்டு கவுன்சிலர் தாஜுதீன் கோபத்தில் உச்சிக்கு சென்று பொதுமக்களிடம் ஆவேசமாக பேசினார். இதனால் திமுக கவுன்சிலருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொது மக்களிடம் சிக்கிக் கொண்ட திமுக வார்டு கவுன்சிலரை அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *