சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று இரவு அவ்வழியாக சென்ற பாதசாரிகளை மாடு ஒன்று முட்டியதில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் நின்ற அம்மாடு வெகு நேரம் அவ்வழியாகச் சென்றவர்களை விரட்டி விரட்டி முட்டியது. மாட்டை நாய் கடித்ததால் அது வெறித்தனமாக நடந்துகொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, தேவராஜ் என்பவரின் மாட்டை பிடித்து மாட்டு உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். சாலையில் மாடு திரிந்ததற்காக இதே மாட்டின் உரிமையாளர் தேவராஜ்க்கு இதற்கு முன்பு மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் மீண்டும் மாடுகளை சாலையில் அவிழ்த்து விடுவதால் தேவராஜ் மீது மாநகராட்சி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாட்டின் உரிமையாளர் மீது 289, 337 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.