சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் வயது 54. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் விமலா, வயது 24, என்பவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணன் கிட்டதட்ட அரை கிழவனாகிவிட்டார். எனவே அவருடன் விமலா பேசுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என ஊரார் கருதினர். ஆனால் தனிமை என்னும் சூறாவளியில் சிக்கி தவித்த கிருஷ்ணன் மனதில் பற்றி படர ஏதாவது சின்ன கொடி கிடைக்காதா என்ற ஏக்கம் இருந்ததை ஊாரார் அறியவில்லை.
இதை நாளடைவில் விமலாவும் அறிந்து கொண்டார்… தெரிந்து கொண்டார். அதனால் அவர்கள் இருவரின் மனமும் பற்றிப்படர்ந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதை அறிந்த இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். போயும் போயும் இந்த கிழவன் தான் உனக்கு கிடைச்சானா என விமலா வீட்டினர் கொதித்தனர்.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலைக்கு சென்று, அங்கு பட்டதாரி பெண் விமலாவிற்கு விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் தாலி கட்டி மனைவி ஆக்கிக்கொண்டார். . இந்த திருமணம் குறித்து தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள், தனது மகளை கிருஷ்ணன் கடத்திச் சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், தந்தையின் புகாரை அடுத்து, போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இத்தகவல் அறிந்த விமலா கிருஷ்ணன் தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு விமலாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை தங்களுடன் திரும்பி வர கட்டாயப்படுத்திய நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும் இருவரும் மேஜர் என்பதாலும் இளம்பெண் விமலா தனது காதல் கணவருடன் செல்வதாக போலீசாரிடம் கூறியதாலும் அவரது விருப்பப்படி கணவர் கிருஷ்ணனுடன் விமலாவை காவல்துறையினரும் அனுப்பி வைத்தனர்.