நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவின் எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கூடலூர் தாலுகா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதன்படி அந்த மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.