ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி பனையூரில் கடந்த 10ம் தேதி நடந்தது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க 35 ஆயிரம் பேருக்குதான் இருக்கைகள் இருந்தன. ஆனால், அதைவிட கூடுதலாக மேலும் 10 ஆயிரம் பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமானோர் அரங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அரங்கத்துக்கு வெளியே ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் பாதுகாப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்தனர். இளம்பெண்கள் பலர் அழுதபடி காட்சியளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் நிகழ்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் உதவி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே ஏஆர் ரஹ்மானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டனர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டனர். நடிகர் கார்த்தி, பார்த்திபன், மோகன், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஏசிடிசி செயல் அதிகாரி ஹேம்நாத், யாழினி, பூங்கொடி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்குள் வர முடியாதவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.