ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் வங்காளா தேச அணியைத் தவிர மற்ற மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டது. இதில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்றால் அது வங்காளதேச அணிதான்.
நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். கில் வழக்கம்போல் பவர்ப்ளே முடியும்வரை நிதான ஆட்டத்தை கடைபிடிக்க, ரோகித் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டு இருந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் இருந்தது.
அதன் பின்னர் அதிரடியாக ஆட நினைத்த கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் தனது விக்கெட்டை இழந்தபோது இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் வந்த விராட் கோலி தனது விக்கெட்டை 2 ரன்களில் இழக்க இவருக்கு அடுத்து ரோகித் சர்மாவும் 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த இஷான் கிஷன் மற்றும் கே.எல் ராகுல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க விடவில்லை என்றாலும் ரன் சேர்ப்பதில் சொதப்பினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. குறிப்பாக 25 ரன்கள் எட்டியபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இலங்கை அணி ஒரு கட்டத்தில் 25.1 ஓவரில் 99 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியின் தனஞ்செயா மற்றும் துனித் கூட்டணி இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
இவர்களின் ஆட்டம் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு வெற்றியை உறுதி செய்துவிடும் என்பது போல் இருந்தது. ஆனால் இவர்களின் கூட்டணியை ஜடேஜா முறியடித்தார். அதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருவேளை இலைங்கை அணியின் கடைசி விக்கெட் நின்றிருந்தால் கூட இந்தியா தோல்வியை சந்தித்து விடும் என்ற பரபரப்பான , மனநிலை போட்டியை பார்த்த ஒவ்வொரு மனதிலும் தொற்றிக்கொண்டது. ஆனாலும் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.