மணல் மாபியா ராமச்சந்திரன் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி குத்தகைக்கு எடுத்து உள்ளார். இங்கு அரசு விதிகளுக்கு புறம்பாக மணல் எடுக்கப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள மணல் குவாரியில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல ராமச்சந்திரனுக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள வீடு, அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீரப்பன் வீடு என தமிழகம் முழுவதும் மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையின்போது மதியம் 1.30 மணி அளவில் திருச்சிகனிம வள இளநிலை பொறியாளர் ஆறுமுகத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறும் கொண்டையம்பேட்டை குவாரிக்கு அழைத்தனர். அங்கு வந்த அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொறியாளர் ஆறுமுகத்திடம், ராமச்சந்திரனுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இடம், அதில் எவ்வளவு மணல் எடுக்க வேண்டும், இதுவரை எவ்வளவு எடுத்திருக்கிறார்கள் என்பது போன்ற 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது.