Skip to content
Home » மகளிர் உரிமைத்தொகை….நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் மனுக்கள்….காரணம் என்ன?

மகளிர் உரிமைத்தொகை….நிராகரிக்கப்பட்ட 57 லட்சம் மனுக்கள்….காரணம் என்ன?

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதே நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும். இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறப்போகிறார்கள்.

மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவரவர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதில் மன நிறைவு அடையாத குடும்பத் தலைவிகள் மறுபடியும் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமாத கால அவகாசம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் பயனாளிகளுக்கு தகுந்த விளக்கங்களை அளிப்பார்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் பேர்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரி ஒருவாிடம்  கேட்டபோது அவர் கூறியதாவது:

அதன்படி 2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள். இதற்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு வீட்டுக்கு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் யார்-யார் உள்ளார்களோ அவர்களுக்குதான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப கணினியில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் ஒவ்வொரு குடும்பத் தலைவியின் விண்ணப்பங்களையும் அதில் பதிவிடும்போது தகுதியான விண்ணப்பமா? இல்லையா? என்பது கம்ப்யூட்டரில் உடனே முடிவு வந்து விடும். அந்த வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துபவர்கள், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள். கார், ஜீப், டிராக்டர் கனரக வாகனம் வைத்திருப்பவர்கள் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற தகுதி கிடையாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவைகளில் ஏதாவது ஒரு பாயின்ட் விண்ணப்பத்தில் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் தானாகவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும். அந்த வகையில்தான் கிட்டத்தட்ட 57 லட்சம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டின் விண்ணப்பம்தான் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

லட்சக்கணக்கான விண்ணப்பம் இந்த வகையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஆண்டு வருமானம் அதிகம் உள்ளவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசு வேலை பார்ப்பவர்களின் வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் விண்ணப்பித்ததில் 3 லட்சம் மனுக்கள் வரை நிராகரிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் விண்ணப்பித்த மனுக்களில் 65 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 35 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!