கரூர் மாநகரில் அமராவதி ஆற்றகங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோவில், த இந்த கடந்த 23-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.
அன்று முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய திருவிழாவான பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலையிலேயே உற்சவருக்கு சிறப்பு அபஷேகம் அதனை தொடர்ந்து உற்சவர் பரமபத வாசல் முன்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்பு அதிகாலை பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் கோவிலை வலம் வந்தார். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய உற்சவர்களுடன் இன்று அதிகாலை சொர்க்க வாசலை கடந்த பின்னர் திரளான பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற நாமம் முழங்க சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.
பின்னர் மண்டபத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவருக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதுபோல கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது.