உலக அளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தையும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இந்திய அளவில், உத்தரபிரதேசம் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மகாராஷ்டிராவும், 3-வது இடத்தில் கர்நாடகமும், 4-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது.
பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயார் செய்யப்படும் கரும்பு உற்பத்தியில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்து உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆலைக்கு செல்லும் கரும்பு சுமார் 1,600 ஏக்கரிலும், செங்கரும்பு 960 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது. செங்கரும்பு தற்போது முழு அளவில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
கரும்பு கொள்முதல் பணிக்கான நடவடிக்கைகளை அரசுதொடங்கி உள்ளது. கூட்டுறவு துறை மூலம் கரும்பு கொள்முதல் பணி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக மாவட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகளின் எண்ணிக்கை மற்றும் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.மதுரை மாவட்டத்தில் 2 கோடியே 35 லட்சம் செங் கரும்புகள் பொங்கல் பண்டிகை அறுவடைக்கு தயாராக இருக்கிறது என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு 9 லட்சத்து 33 ஆயிரம் கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தி இருப்பதால் ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி உள்பட பிற மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும், மதுரையில் இருந்து கொள்முதல் செய்ய அந்தந்த மாவட்ட கூட்டுறவு துறையினர் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கி உள்ளனர்.