பா.ஜனதா தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சம்மனை எதிர்நோக்கி இருக்கும் ஊழல் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பேசியதாக தெரிகிறது. அந்த பேச்சு, தற்போது, மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் அப்படி கூறவில்லை என்று அவர் தெரிவித்த போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
பா.ஜனதா கட்சி சலவை இயந்திரமாக மாறி வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அனுபம் ஹஸ்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:பெரிய தங்க பிரேஸ்லெட், செயின்கள், ஏஜென்சிகளின் கண்ணில் இருந்து தப்பித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், ஒருவேளை அமைப்புகளின் சம்மன்களை பெறலாம். ஊழல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை இந்த மேடையில் இருந்து அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்னுடைய பேஸ்புக் பக்கத்திற்கு சென்று என்னை தொடர்பு கொள்ளலாம். பா.ஜனதாவில் இணைவது குறித்து என்னிடம் பேசுவதற்கு கூச்சமாக இருக்கிறது என்று நினைத்தால், என்னைத் தொடர்பு கொண்டு, உங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். கட்சிக்கு உங்களை எப்படி பயன்படுத்தும் என்பது குறித்து ஆராயப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.