மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் வள்ளலார் கோயில் எனப்படும் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீ வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடக்கே உத்தர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளலாக ஞானத்தை அள்ளித்தரும் பெருமானாக வதான்யேஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். நந்தியம் பெருமானுக்கு ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி இத்தலத்தில் ஞானஉபதேசம் செய்து அருளியதினால் வேறெங்கும் இல்லாதவாறு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார். சப்த மாதாக்களில் ஸ்ரீசாமுண்டிதேவி ஞானாம்பிகையை பூஜித்து வழிபாடு செய்த தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு இன்று காலை 9 மணி க்கு
மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி பூர்வாங்க பூஜைகள் கடந்த 3ம்தேதி தொடங்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கோயிலின் தென்மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சப்த மாதா, காவிரித்தாய் கங்கை அம்மன் மற்றும் வீரபத்திரர் விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தர்மபுரம் ஆதீனம் 27ஆவது சன்னிதானம் மாசிலாமணி தேசிகசுவாமி முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.