திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் 10 ,11, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்திருந்தனர். பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் இருக்கும் அரச மரத்தில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. அந்த தேன் கூட்டில் சில வாலிபர்கள் கல் வீசினர். இதனால் தேன் கூட்டில் இருந்து கைலந்த தேனீக்கள் அவ்வழியே வந்த மாணவிகளையும், பொதுமக்களையும் விரட்டி விரட்டிகொட்டியது.
இதில் அலறி அடித்து மாணவிகள் ஓடினர். தேனீக்கள் கொட்டியதில் கீர்த்தனா, வைஷ்ணவி, வைஷாலினி, சுகப்பிரியா, கனிஷ்கா ஆகியோரும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரோகித், சுந்தர்ராஜ் ஆகியோரும் தேனீக்கள் கொட்டியதில் வலியால் துடித்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கைள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் மாணவிகளுக்கு ஆறுதல் கூறி தனியார் பள்ளியில் இருந்து பள்ளி வாகனம் வரவழைத்து மாணவிகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மாணவிகளை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளை சைட் அடிக்கவும், கேலி கிண்டல் செய்யவும் இந்த பள்ளியின் முன்பும், மாணவிகள் வரும் பாதையிலும் காலை, மாலை சில இளைஞர்கள் நின்று கொண்டு வாடிக்கையாக மாணவிகளிடம் சேட்டை செய்து வருகிறார்களாம். அவர்கள் தான் இன்று தேன் கூட்டில் கல் எறிந்து மாணவிகளுக்கு இந்த பிரச்னையை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வாலிபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா.பேட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.