கோவை அடுத்த கோவைபுதூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான சி எஸ் அகாடமி பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காலை வடவள்ளி பகுதியில் இருந்து 15 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியின் மூலம் இயக்கப்படும் தனியார் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் வடவள்ளி பகுதியில் வைத்து வாகனத்தின் ஓட்டுனர் திடீரென ஓட்டுனர் இருக்கையிலேயே அமர்ந்து உறங்கியுள்ளார். இதை அடுத்து சில பெற்றோர்கள் அங்கு வந்து விரைந்து வாகனத்தை எடுக்குமாறு கூறியுள்ளனர். அப்போது ஓட்டுநர் அதிகளவிலான மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து பொதுமக்கள் கூடி பள்ளி வாகனத்தில் இருந்து ஓட்டுநரை கீழே இறக்கி சம்பவம் குறித்து வடவள்ளி காவல் நிலையத்திற்கு அளித்தனர்.
அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் வாகனத்தை ஓட்டியது வடவள்ளி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் மது போதையில் இருந்த ஓட்டுநர் நேற்று இரவு முழுவதும் அதிக அளவில் மது அருந்தியதும் போதை தெளியாத நிலையில் இன்று காலை வழக்கம்போல குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி புறப்பட்டபோது தூக்க கலக்கத்தில் வாகனத்தில் உறங்கியதும் தெரிய வந்தது. பள்ளிக்கு புறப்படும் சமயத்தில் ஓட்டுநர் உறங்கியதால் பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் மட்டும் வேறு வாகனங்கள் மூலம் பள்ளி சென்ற சூழலில் மற்றவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….