Skip to content

திருச்சி அருகே குளத்து நீரில் மூழ்கிய இருவர்… துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவன்.

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அடுத்த கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி என்பவரது மகள் விஸ்வஜோதி. இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள முத்தாளம்மன் குளத்தில் அவரது சகோதரி மகர ஜோதி மற்றும் தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தார். இதில் விஸ்வஜோதி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். மற்றவர்களும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த 8 ம் வகுப்பு படித்து வரும் சபரீஸ்வரன் (வயது 13) என்பவர் அங்கிருந்த படிகட்டில் அமைந்திருந்த நிலையில் உடனே குளத்தில் இறங்கி நீரில் மூழ்கிய விஸ்வஜோதி, தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோரை மீட்க முயன்றார். ஆனாலும் விஸ்வ ஜோதி நீரில் மூழ்கி விடவே தேவதர்சினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகிய இருவரையும் பிடித்து இழுத்து வந்து மீட்டுள்ளார். அதன் பிறகு தான் அனைவரும் சப்தம் போடவே அருகில் உள்ள ஒரு பெண் பார்த்து அவரின் உறவினரின் உதவியுடன் விஸ்வஜோதியை மீட்டு மேலே கொண்டு வந்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஸ்வஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த நேரத்தில் விரைந்து செயல்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றிய 13 வயது சிறுவனின் துணிச்சலான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *