ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கெலக்டர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்,தூத்துக்குடி உதவி பொது மேலாளர் (நபார்டு) ஆர்.கே.சுரேஷ் ராமலிங்கம் வரவேற்பு அளித்தார். இதில்,திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, விழாவில் கனிமொழி எம்.பி உரையாற்றினார்.
ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், துணை ஆட்சியர் பிரபு, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.சதீஷ், ப.சஞ்சய் காந்தி (தமிழ்நாடு அரசு ஒருங்கிணைப்பு அலுவலர் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்கள்), ஜி. மதனகோபால் (மேலாளர் – நபார்டு, மதுரை வேளாண் தொழில் முனைவோர் பாதுகாப்பு மையம்), தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெறுகிறது.
ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமின்றி, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா, பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் என, நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், இனிமேல் உலகளவில் மவுசு கிடைக்கும். பல்வேறு நாடுகளுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். வெற்றிலையில் இருந்துமதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.