108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.
இதனால் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும். இது பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் ஸ்ரீரங்கத்தில் நிற்காமல் சென்று வந்தது.
இது குறித்து பக்தர்கள், அந்த தொகுதி எம்.எல்.ஏவான பழனியாண்டியிடம் கோரிக்கை வைத்தனர். அவர் இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தார். சென்னையில் தென்னக ரயில்வே பொதுமேலாளரை சந்தித்தும் மனு கொடுத்தார். பக்தர்களின் வசதிக்காக வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து வருகிற 16ம் தேதி முதல் ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல தென்னக ரயில்வே உத்தரவிட்டு உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கம் மக்களும், பக்தர்களும் பழனியாண்டி எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்தனர். எம்.எல்.ஏ. பழனியாண்டி தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.