சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது. சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என மீண்டும் தனது கருத்தை உறுதிபட கூறியிருந்தார் அமைச்சர் உதயநிதி.
இதனால், பல்வேறு வழக்குகள் , எதிர்ப்புகள் அமைச்சர் உதயநிதி மீது வந்து கொண்டு இருக்கிறது. சனாதன சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு நடிகர் சத்யராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசி உள்ளார். ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது. அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்றார். முன்னதாக நடிகர் சத்யராஜை நேரில் சந்தித்து அவரது தாயார் நாதாம்பாள் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.