தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா (14) , மகன் முகமது சைபு (4) ஆகியோரை விடுவதற்காக ஸ்கூட்டியில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினாபேகம் குழந்தைகள் கண்முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் குழந்தைகள் சபிகா, முகமது சைபு ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக்கல்லூரி போலீசார் ஜெரினாபேகம் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.