பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பரத் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறார். சுற்றுலா முடிந்து சொந்த ஊர் திரும்பிய பரத் வயல் வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பச்சை குத்திய பகுதியில் புண் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டு அவரது அக்குள் பகுதியில் நெரிக்கட்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் பரத்திற்கு கழுத்தில் கட்டி பெரிதாகி கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பரத்தை அவரது குடும்பத்தார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பரத்தை மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இதனால் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது, இவரது தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சிகிச்சை பலனின்றி தஞ்சை தனியார் மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்துள்ளார்.