தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் 2022, செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கு அடுத்த நாளான 25 ஆம் தேதி கோவையில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தமிழ் வழிபாட்டுக்கு வடமொழிப் பற்றாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு அமைத்த கருத்துக் கேப்புக் கூட்டத்தில் புகுந்து இடையூறு செய்தனர்.
அவர்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக கரூரில் இக்கூட்டியக்கத்தின் சார்பில் ஆகமத் தமிழ் எழுச்சி மாநாட்டை நிகழாண்டு மார்ச் 25 ஆம் தேதி நடத்தினோம். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள கரிகாற்சோழன் கலையரங்கத்தில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாட்டை வரும் 9 ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையர் நலன், அயலகத் தமிழர்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேசுகிறார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கெப்மார மடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் அருளாசியுரை வழங்குகின்றனர்.
மாலையில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றுகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறைவுரையாற்றுகிறார். இதையொட்டி, 127 கட்டுரைகள் வரப்பெற்றன. இவற்றை வல்லுநர் குழுவினர் மதிப்பீடு செய்து, 4 தலைப்புகளில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்துள்ளனர்.
இதற்கு ஒவ்வொரு தலைப்பிலும் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. ஆயிரம் என மாநாட்டில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க. பாஸ்கரன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் செ. துரைசாமி, மாநாட்டுப் பொருளாளர் இல. மணி, பேராசிரியர் மெய்யடியான் ஆகியோர் உடனிருந்தனர்.