கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் கல்லூரி. இங்கு பி.ஏ. பொலிட்டிக்கல் சயினிஸ் துறையில் பிரியேஷ் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வை கிடையாது. கண் பார்வை இல்லையே என்று வீட்டில் முடங்கி விடாமல் தன்னம்பிக்கையுடன் படித்து ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று பேராசிரியராக பிரியேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிரியேஷ் பாடம் எடுக்க வரும் போதெல்லாம் மாணவர்கள் கூச்சல் போடுவதும், பலர் வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியே சென்றுவிடுவதுமாக இருந்துள்ளனர். இது பிரியேஷுக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்துள்ளது. ஆனாலும் இது பற்றி முதல்வரிடம் சொன்னால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களே என அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பேராசிரியர் பிரியேஷ் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களின் செயல் எல்லை மீறிச் சென்றது. பிரியேஷ் பாடம் எடுக்கையில் அவர் முன்னால் வந்து நின்று கோமாளித் தனம் செய்வது, பெஞ்சில் படுத்துக் கொண்டு செல்போனில் கேம்ஸ் விளையாடுவது என மாணவர்கள் சேட்டை செய்துள்ளனர். ஆனால் இது தெரியாத பிரியேஷ், மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமே என கத்தி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த பரிதாபக் காட்சியை அங்கிருந்த ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டான். இந்த வீடியோ தீயாக பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பார்வை இல்லை என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியரிடம் கண்ணியமின்றி மாணவர்கள் நடந்து கொண்டது காண்பவர்களை கண் கலங்க செய்தது. இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானதால் சம்பந்தப்பட்ட 5 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த மாணவர்கள் தங்களை மன்னிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சியுள்ளனர். மேலும், பேராசிரியர் பிரியேஷிடமும் அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளனர். தன்னை கேலி செய்த போதிலும், மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை மன்னித்து விடுமாறு கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியர் பிரியேஷ் பரிந்துரைத்துள்ளார். இதனால் மாணவர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்வது குறித்து கல்லூரி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.