ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 37.1 ஓவாில் 292 ரன்கள் எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைய முடியும். இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலும் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைய முடியாது என நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ஆப்கன் வீரர்கள் பந்துகளை அடித்து நொறுக்கினார்கள். வெற்றி இலக்கை தொட சில ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விக்கெட்டுகள் மளமளவென சாய்ந்தது.
இந்த நிலையில் 37வது ஓவரினங கடைசி 2 பந்துகளில் ரசீத்கான் 2 பவுண்டரிகள் அடித்தார். 38வது ஓவரில் 1 ரன்னில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அப்போது பேட்டிங் செய்த பரூக்கி ரன் எடுக்க தவறிவிட்டார். அடுத்ததாக அடுத்த பந்தில் சிக்சர் அடித்தால் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கன் சென்று விடலாம் என்ற நிலை இருந்ததாகவும், இந்த தகவல் மைதானத்தில் இருந்த 2 பேட்ஸ்மேன்களுக்கும் தெரியாது என்ற நிலையில் அந்த பந்தையும் பரூக்கி வீணடித்தார். அப்போது 9 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி பெற 2 ரன்களே தேவையான நிலையில் இலங்கை பந்து வீச்சில் பரூக்கி போல்டு ஆனார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 2 ரன்னில் வென்ற இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷகிடி , வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் நன்றாகப் போராடினோம், 100 சதவீதம் கொடுத்தோம். நாங்கள் விளையாடிய விதம், பேட்டிங் செய்த விதம் குறித்து அணிக்கு பெருமை. கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டி வடிவத்திலும் நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன. நாங்கள் உலகக் கோப்பைக்கு மிக அருகில் இருக்கிறோம், இங்கே நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நாங்கள் கற்றுக்கொள்வோம். எங்களுக்கு ஆதரவாக உள்ள ரசிகர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என தெரிவித்தார்.