இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath எனப் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்- இந்தியா மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியா பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் பயண நிகழ்ச்சி நிரலில் ‘பாரதப் பிரதமர்’ (Prime Minister of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகளும் இருந்தாலும், இதுவரை பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா, பிரசிடென்ட் ஆப் இந்தியா என்று தான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். ‘இந்தியா’ என்ற பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், ‘இந்தியா’ என கூட்டணிக்கு பெயர் வைக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்பது குறிப்பிடதக்கது.