ஆட்டோக்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் ஏற்படும் சுற்றுச்சுழல் மாசை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 700 ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்களை விற்பனை செய்யும்போது மயிலாடுதுறையில் அதானிகுழுமத்தின் 8 இயற்கை எரிவாயு பங்க்குகள் நிறுவப்படும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று ஆட்டோ நிறுவனம் கூறியது.
ரூ.104க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 30 கி.மீ சவாரி செய்யலாம் ஆனால் ரூ.70.65க்கு இயற்கை எரிவாயு நிரப்பினால் 50கி.மீ தூரம் செல்லும் என்பதை நம்பி ஆட்டோ டிரைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பெட்ரோல் ஆட்டோவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை தவணைக்கு வாங்கினர். மயிலாடுதுறை பகுதியில் மட்டும் 282 ஆட்டோக்கள் ஓடுகின்றன. மாவட்டம் முழுவதும் 700 இயற்கை எரிவாயு ஆட்டோக்கள் இயங்குகின்றன.
மயிலாடுதுறையை ஒட்டி லட்சுமிபுரம் மற்றும் சேத்திரபாலபுரம் ஆகிய இரண்டு பகுதிகளில் அதானி குழுமம் 2 இயற்கை எரராவயு பங்க்குகள் மட்டுமே அமைத்துள்ளன. ஆட்டோவுக்கு 7.5 கிகி எரிவாயு நிரப்பவேண்டும் என்றால் 5.5 கிகி மட்டுமே அளிக்கின்றனர். அதுவும் நாள் கணக்கில் காத்துக் கிடக்கவேண்டியுள்ளது. ஒருசில நாட்களில் எரிவாயு தீர்ந்துவிட்டது என்று கைவிரித்துவிடுகின்றனர்.
தேவையான இயற்கைஎரிவாயு பங்க்குகளை திறக்காததாலும் தேவைக்கேற்ப எரிவாயுவை ஆட்டோக்களுக்கு வழங்காததாலும் அதானிகுழுமம் கொடுக்கும் இயற்கை எரிவாயு 30கி.மீ மட்டுமே செல்கிறது ஆட்டோத் தொழிலில் நட்டம் ஏற்பட்டுவருகிறது என குற்றச்சாட்டுகின்றனர். கடந்த 6 மாத காலமாக மயிலாடுதுறையில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு நிலவுவது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் புகார் அளித்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆடசியர் உத்தரவிட்டார். அதிகாரிகள் தொடர்புகொண்டனர். அதானி குழுமம் இதற்கான தீர்வை ஏற்படுத்தவில்லை என்றால் வேறு நிறுவனத்தினடமிருந்து இயற்கை எரிவாயு பங்க் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.