பீகார் மாநிலம், காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம் பேசுவது உண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடிக்கடி அவர் தனது உரிமையாளரின் மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். கணவர் வீட்டில் இல்லாத சமயம் அந்த பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அவர் கண்டித்தார். சம்பவத்தன்று உரிமையாளர் வீட்டுக்கு சென்ற அவர் அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். ஆனந்தின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அருகில் இருந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் ஆனந்த் தப்பி ஓட முயன்றார், ஆனால் அவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர், மேலும் அவரது தலையை மொட்டையடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர், செருப்பு மாலையும் அணிவித்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த பாலியல் தொந்தரவு குறித்து போலீசில் யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர். ஆனந்த் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.