Skip to content

தஞ்சையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் மனுநீதிச்சோழன் (28). டிரைவர். இவர், கடந்த 29-ந் தேதி தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு வர தனியார் பஸ்சில் ஏறி உள்ளார்.

அப்போது அந்த பஸ் கண்டக்டர் வலங்கைமான் அனந்தமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜலிங்கம் (39), சுந்தர பெருமாள் கோவிலில் பஸ் நிற்காது, கீழே இறங்கவும் என கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனுநீதிச்சோழன் செல்போன் மூலம் சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுந்தரபெருமாள் கோவிலுக்கு அந்த தனியார் பஸ் சென்ற போது, மனுநீதிச்சோழனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பஸ்சை மறித்து கண்டக்டர் ராஜலிங்கத்தை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து ராஜலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனுநீதிச் சோழனின் உறவினர்கள் சுந்தர பெருமாள் கோவில் அண்ணாநகரை சேர்ந்த பன்னீர் மகன் பரணி (25), மதியழகன் மகன்கள் கலையரசன் (32), கலையமுதன் (27), செல்வ விநாயகம் மகன் லட்சுமணன் (21) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!