புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக திட்டச்சேரி மெயின்ரோடு பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திட்டச்சேரி பஸ் நிலையம், பச்சாந்தோப்பு மெயின் ரோடு பகுதியில் நின்று கொண்டு இருந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த பைகளில் தலா 110
மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 2 பேர் கைது விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி முனியம்மா (வயது 65), நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி (55) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்களை திருத்துறைப்பூண்டி பகுதிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த 220 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.