நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 120 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையினரால் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அவற்றின் நகல்களும் செந்தில் பாலாஜி தரப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது. எனவே, அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி கூறினார். மேலும், அடுத்த முறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி வாயிலாக ஆஜர்படுத்தினால் போதும் என்றும் நீதிபதி சிறைத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு முயற்சித்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். ஆனால், முதன்மை அமர்வு நீதிமன்றமும் விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம், சிறப்பு நீதிமன்றம்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும், அங்கேயே சென்று முறையிடுங்கள் என்றும் நீதிபதி அல்லி அறிவுறுத்தினார். இதன்பிறகு எம்.பி. எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீல் டீம் முறையிட்டது. அப்போது, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பது சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி நீதிபதி அறிவுறுத்தினார். இதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சுந்தர் மற்றும் சக்தி வேல் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், ஏற்கனவே, ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியதை சுட்டிக்காட்டி இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று நீதிபதி சுந்தர் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும் கூட தலைமை நீதிபதியிடம் தான் முறையிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை எண்ணிடுவது தொடர்பாக தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் 4ம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது..