தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பள்ளத்தூர் கிராமத்தில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. சேதுபாவாசத்திரம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) சாந்தி தலைமை வகித்தார். விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் பேசினார். பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு பள்ளத்தூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டு 50 ஏக்கர் பரப்பளவிற்கு இத்திட்டம் மேற்கொள்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுவாக ஏற்படுத்தி, இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் தானியங்கள் பயிர்சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை மூலம் பதிவு செய்யும் முறை மற்றும் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மண் மற்றும் நீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அங்கக சத்துகள் மற்றும் இரசாயன பூச்சிக்கொல்லி கழிவுகள் இருப்பதை அறிந்து சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சாந்தாஷீலா, அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.