நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
இதில் கோவை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த வாக்கு சாவடிகள், புதிதாக தேவைப்படும் வாக்குசாவடிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கடந்த முறை வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல் குறித்தும் அவை இம்முறை களையபடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட தாசில்தார்களும் விளக்கமளித்தனர். இதில் மலைப்பகுதிகளில் இருக்கும் கிராம மக்கள் வாக்களிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து அரசியல் கட்சியினர் எடுத்துரைத்தனர். அரசியல் கட்சியினர் தாசில்தார்கள் கூறிய அனைத்து விஷயங்களும் குறிப்பெடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.