தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
திருநெல்வேலி, சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்து இருக்கிறது.
அதில், திருநெல்வேலியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கிலோமீட்டர், பாளையம்கோட்டை முதல் பொன்மாக்குடி வரை 12.03 கிலோமீட்டர், சங்கர் நகர் முதல் வசந்த நகர் வரை 14.65 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று, திருச்சி மாநகரில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கும் துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் கரபுரநாதர் கோயில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கிலோமீட்டர், கருப்பூர் முதல் சேலம் ரெயில் நிலையம் வழியாக 18.03 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.