தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மையில் அனைத்து அரசு பள்ளிகளுக்குமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஆக.31) வெளியான தினமலர் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை, ‘கழிவறை’ போன்ற தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் கண்டன பதிவை ரீட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினமலர் நாளிதழுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், “கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.