திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட்,ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று சமயபுரத்தில் இருந்து குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் மற்றும் சமயபுரம் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளர் மாலதி ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இனாம் சமயபுரம் ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சஞ்சீவி மகன் 27 வயதான கமல் என்கின்ற யுவனேஸ்வரன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். மேலும் இந்த புகையிலை பொருட்கள் சமயபுரம், லால்குடி, டால்மியாபுரம், திருச்சி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.