அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடர் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரை வென்று இறுதிப்போட்டிக்குச் சென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். டை பிரேக்கர் சுற்றுவரை சென்ற இந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். இதனால் 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, 21 ஆண்டுகளுக்கு பிறகு உலக செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குச் சென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.
இதையடுத்து உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ப உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து, சென்னை வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து வழங்கினார். மேலும் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.