இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமே நடத்த இருந்தது. ஆனால் இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்ல மறுத்ததால், பாதிக்கு மேற்பட்ட போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தானில் நடக்க உள்ள தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடக்க விழா மதியம் 2 மணிக்கு (பாகிஸ்தான் நேரம்) தொடங்கும் என்று அறிவித்துள்ளது. தொடக்க விழாவில் பாகிஸ்தானிய பாடகி ஐமா பெய்க் மற்றும் நேபாள பாடகி திரிஷாலா குருங் உட்பட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இவர்களின் நிகழ்ச்சிகளுக்கு பின் வானவேடிக்கைகளுடன் பாகிஸ்தான் – நேபாளம் இடையேயான முதல் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஐமா பெய்க் இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பாகிஸ்தானிய பிரபல பாடகி ஆவார். திரிஷாலா குருங் நேபாளத்தில் சில ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர்.