கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அழைத்துள்ளது.