இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என சீனா அடாவடி செய்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, தொடர்ந்து எல்லையில் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
தற்போது சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல, ஆக்கிரமிப்பில் வைத்து இருக்கும் இந்தியப் பகுதிகளை அக்ஷ்யா சின் என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது. தைவானையும் தனது நிலப் பகுதியாக சுட்டிக்காட்டியுள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருதரப்புக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மீண்டும் சீனா அடாவடியாக வரைபடம் வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.