மேரி மாதாவின் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (29ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக மாலை 5.45 மணியளவில் பேராலய முகப்பிலிருந்து கொடி ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலம் ஆலயத்தை அடைந்ததும், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் ஆகியோர் கொடியை புனிதம் செய்து வைக்க, கொடியேற்றம் நடைபெறும்.அதைத்தொடர்ந்து ஆலய கோபுரங்களில் மின்னொளி ஒளிர விடப்படும்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கத்தில், மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவில், பேராலயம், மாதா குளம், விண்மீன் ஆலயம், பேராலய மேல் மற்றும் கீழ் கோயில்கள் ஆகியவற்றில் நாள்தோறும், தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் , கொங்கணி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும். நாள்தோறும் மாலை சிறிய தேர் பவனி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7 ம் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறும். தொடர்ந்து, மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி காலை 6 மணியளவில் விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
விழாவை முன்னிட்டு, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 3,500 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொடியேற்றத்தையொட்டி வேளாணங்கண்ணியில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் மாதாவுக்கு அர்ப்பணிப்பதற்காக 1,800 கிலோ எடையுள்ள தேக்கால் ஆன பிரம்மாண்ட ஜெபமாலையை வேளாங்கண்ணிக்கு கொண்டு வந்துள்ளனர்.