மயிலாடுதுறை அருகே வடுகபுஞ்சையை சேர்ந்த அருண்ராஜ்(30) என்பவரை கடந்த 23ஆம் தேதி செம்பனார்கோவில் கடைவீதியில் மருந்துவாங்க சென்றபோது செம்பனார்கோவில் காவல்ஆய்வாளர் குணசேகரன் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. வலிதாங்க முடியாமல் சாலையில் அமர்ந்த அருண்ராஜை மேலும் தாக்கியதால் படுகாயமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற காவல் ஆய்வாளர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து அருண்ராஜின் மனைவி ஜெயந்தி(23) என்பவர் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், சமூகநல வழக்கறிஞர் ஷங்கமித்திரன் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். எந்த தவறும் செய்யாத நபரை பட்டப்பகலில் கடைவீதியில் சகட்டுமேனிக்குத்தாக்கி காயப்படுத்தி மனித உரிமையை மீறிய காவல்ஆய்வாளர் குணசேகரன்மீது சாதிப் பெயரைச் சொல்லி தாக்கியதற்கு உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகையில் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் செம்பனார் கோவில் காவல் நிலையம் முற்றுகை இடப்படும் என எச்சரித்துள்ளனர்.