மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. லக்னோ- ராமேஸ்வரம் சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தப் போது, திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் ரயிலில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மொத்தம் 60 க்கும் மேற்ப் பட்டோர் பயணம் செய்த அந்த ரயிலில், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பலி எண்ணிக்கை இன்னும் கூடும் என, மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து இருப்பது கவலை அளிக்கிறது.
தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்த, சுற்றுலாப் பயணிகள் அனைவரின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு எந்திரம் மிக விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று, நிவாரணப் பணிகளை திறம்பட செய்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. ரயில்வே நிர்வாகம் இனி வரும் காலங்களில், வெடிக்கும் தன்மை உள்ள பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதை மிகத் தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும். ரயில்வே துறையில் அடுத்தடுத்த விபத்துகள் நடந்து வருவது ஒன்றிய அரசின் செயலற்ற தன்மையை பறைசாற்றுகிறது என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.