தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் 61 நபர்கள் கலந்து கொண்டனர் . பயிற்சியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட உதவி திட்ட இயக்குனர் ஆர்.ரமேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் வெ.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் லெ.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில கருத்தாளர்கள் சங்கரலிங்கம், ராஜபாண்டி, அறிவரசன், பாரதிராஜா அருண்குமார் ஆகியோர் கருத்தாளராக செயல்பட்டு, பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் நடத்தினர். இழுத்தல் மூலம் விசையின் செயல்பாடு, பலூன் செயல்முறை மூலம் அழுத்தம் உயரம் கண்டுபிடிக்கும் கருவி, உடல் பருமன் குறியீட்டை கண்டுபிடித்தல், கூடைப்பந்து விளையாட்டு மூலம் குழந்தைகள் கவனத்தை ஒருங்கிணைத்தல் போன்ற இயற்பியல், வேதியியல் , உயிரியல் மற்றும் கணித தொடர்புடைய பயிற்சிகள் வழங்கினர். பயிற்சி முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன் நன்றி கூறினார்.