தமிழக வாழ்வுரிமைக் கட்சி தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் வேல்முருகன் கூறியதாவது… காவிரி பிரச்சனையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஏற்கனவே ஒன்றிய நீர் பாசனத்துறை அமைச்சரை சந்தித்தும் பலன் இல்லை. அதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று முதலமைச்சரே உடனிருந்து தீர்வு காண வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து வரவேற்கக்கூடிய கருத்து. ஆண்டுதோறும் நீட் தேர்வு தேர்ச்சி முடிவுகள் வந்த பிறகு தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். அந்த வகையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து. காவிரி போல் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து போராட வேண்டும் என்பது எங்கள் கருத்து. திமுக கூட்டணியில் தான் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்தோம். அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.