மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (27.08.2023) 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
அதன்படி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது, இன்று முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.