Skip to content

ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

  • by Authour

சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். ரம்மி விளையாட்டில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லை அதிகமாகி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இருந்து மீளாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் கடந்த 2020-ம் ஆண்டு குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.

அப்போது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள கீதாகிருஷ்ணன் திட்டமிட்டார். இதற்காக தனது மூத்த மகள் குணாலினியை கழுத்தை நெரித்து அப்போது கொன்றுள்ளார். மனைவி கல்பனா தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். இதன் பின்னர் திடீரென கீதா கிருஷ்ணனின் மனம் மாறியது. அவர் தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு விட்டு இளையமகள் மானசாவுடன் திருப்பதிக்கு சென்று தலை மறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்த கீதா கிருஷ்ணன் இளைய மகள் மானசாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் கீதா கிருஷ்ணனின் கழுத்தை நெறுக்கியுள்ளது கடன் தொல்லை .

இதையடுத்து இளைய மகள் மானசாவை நேற்று இரவு கழுத்தை நெரித்து கொன்ற கீதாகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவர், கீதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் அவர் மகளுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்தனர். கல்பனா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கீதாகிருஷ்ணன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாளராக இருந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 2 பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் குடும்பத்தில் சந்தோஷம் களைகட்டியே இருந்து உள்ளது. ஆனால் கீதாகிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பின்னர் புயல் வீசத் தொடங்கியுள்ளது.  கீதாகிருஷ்ணன் தான் வசித்து வந்த வீட்டை லீசுக்கு விடுவதாக லட்சுமிபதியிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் லீசுக்கு விடாமல் இழுத்தடித்ததால் லட்சுமி பதி பணத்தை திரும்ப கேட்பதற்காக சென்ற போதுதான் தற்கொலை சம்பவம் வெளியில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!