திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வினோத்குமார் (37) என்பவர் வணிகவியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் பணியில் சேர்ந்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்.
பேராசிரியர் வினோத்குமார் வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். மேலும் அவரது அறைக்கு மாணவிகளை தனித்தனியாக வரச் சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை சக மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபோது இன்று மதியம் மாணவர்களிடம் சில மாணவிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமார் அறைக்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது வினோத்குமார், உங்கள் வேலையை பாருங்கள் என்று அலட்சியமாக தெரிவித்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியது. திடீரென சில மாணவர்கள் ஆத்திரம் அடைந்து பேராசிரியர் வினோத்குமாரை அடித்தனர்.
அவரும் மாணவர்களை தாக்கத்தொடங்கினார். இதனால் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக அடி உதை கொடுத்ததால் தாக்குபிடிக்க முடியாத பேராசிரியர் தரையில் விழுந்து மயங்கியது போல படுத்துக்கொண்டார். இதனால் பயந்து போன மாணவர்கள் அடி உதையை நிறுத்திக்கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம், வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். பாலியல் சேட்டையில் ஈடுபட்ட பேராசிரியர் வினோத்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.