இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும் வருகிறது.ல் கடந்த 2021-ம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. மாலை 5 மணிக்கு டில்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இந்த விருதை அறிவிக்கிறார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ஜெய் பீம், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், சிம்பு நடித்த மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜெய் பீம், கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் இந்த திரைவிருதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு திரையுலகை பொறுத்தவரையில் ‘புஷ்பா’ படம் போட்டியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் பெரிய அளவிலான போட்டிகள் இல்லை எனவும், ‘சூர்யவன்ஷி, 83’, ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அந்த ஆண்டு வசூல் ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகத்திற்கு இந்த ஆண்டு கூடுதல் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நடிகர்கள் சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன் ஆகியோர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர்களில் ஞானவேல், மாரி செல்வராஜ் ஆகியோரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம். மேலும் இசையமைப்பாளர்களில் அனிருத்திற்கு விருது கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது.