மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 20-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.
ஆனால், மதுரையில் மட்டும் அன்றைய தேதியில் உண்ணாவிரதம் நடைபெறவில்லை. அன்று மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பொன் விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. மதுரை புறநகர் பகுதிகளில் இருந்து தி.மு.க.வினரின் வாகனங்களும், அதேபோல் அ.தி.மு.க. மாநாட்டிற்கும் வாகனங்கள் ஏராளமானவை வரும் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் மட்டும் வேறொரு தேதியில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் முதலில் 23-ந்தேதி நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்தது. பின்னர் மீண்டும் இந்த உண்ணாவிரதம் 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்: சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உண்ணாவிரத பந்தலில் இதுவரை நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா உள்ளிட்டவர்களின் படங்கள் பிளக்ஸ் பேனர் வடிவில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், இதில் பங்கேற்ற மாணவரணியினர் பலர் அனிதாவின் படம் அச்சிடப்பட்டிருந்த டி.ஷர்ட் அணிந்து பங்கேற்றனர். மேலும் மதுரை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.