Skip to content
Home » தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு பரிசு.. தஞ்சை கலெக்டர்..

தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு பரிசு.. தஞ்சை கலெக்டர்..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதில் வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பட்டிகள், பற்றுச்சீட்டுகள், விலைப்புள்ளிகள், இரப்பர் முத்திரைகள் ஆகியவற்றைத் தமிழில் அச்சிட்டு பயன்படுத்தியும், நிறுவனப்பெயர்ப்பலகைகளைத் தமிழில் அமைத்தும் உள்ள 3 வணிக நிறுவனங்களை (Business Firms) தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்பெறும். தகுதியுடைய வணிக நிறுவனத்தினர் இதற்கான படிவத்தினை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தமிழில் பெயர் சூட்டியுள்ள குடியிருப்பு அடுக்ககங்கள் (Residential Apartments), வணிக வளாகங்கள் (Shopping Complex) ஆகியவற்றில் 3 குடியிருப்பு அடுக்ககங்கள். 3 வணிக வளாகங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அலுவலர்கள் மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்பெறும். இதற்கான படிவம் மற்றும் விதிமுறைகளை உள்ளாட்சி உயர் அலுவலகம் (மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம்) பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04362– 271530) தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!