Skip to content
Home » சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆய்வின்  சாதனை  நிகழ்வாக கருதப்பட்ட சந்திரயான்-3  லேண்டர்  நிலவில்   நேற்று  மாலை 6.04 மணியளவில்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை  இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி  வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி பல்வேறு சோதனைகளை நடத்தியிருந்தாலும், இந்தியாவின் சந்திரயான்-1 தான் நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை முதன்முதலாக கண்டறிந்தது.

2019-ல் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 விண்கலம் தரையிறங்க முடியாமல் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், கடந்த ஜூலை 14-ம் தேதி பலவேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சந்திரயான-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 41 நாட்களுக்கு பின்  நேற்று மாலை  நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சந்திரயான் 3 வெற்றிக்கு  நமது விஞ்ஞானிகள் தான் முழு காரணம் என்றாலும் இதில் தமிழகத்தின் பங்கு முக்கியமாக அமைந்தது. அதாவது  சந்திரயான் 3 டைரக்டர் வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதை தாண்டி,  இந்த வெற்றிக்கு நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி ,ராமதேவம் ஆகிய கிராமங்களில்இருந்து எடுக்கப்பட்ட தாது மண்ணும் மூலக்காரங்களில்   ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் மேற்பரப்பை போல் வடிவம் கொண்ட மண் சார்ந்த பகுதிகள் இந்த மூன்று கிராமங்களில் சுமார் 5.45 சதுர கிலோமீட்டா பரப்பளவில் உள்ளன.சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக இந்தகிராமங்களில் இருந்து எடுக்கப்பட்ட 50 டன் மண்ணை கொண்டு தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரிசோதனை நடத்தினர். அதில் திருப்தியடையவே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத்  தொடங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை சேலம் பெரியார் பல்கலைக்கழகப் புவி தகவலியல், கோளவியல் துறை செய்திருந்தது. தற்போது சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்துள்ளதால், நாமக்கல் மாவட்ட மக்களும், குறிப்பாக சித்தம்பூண்டி, குன்னமலை, ராமதேவம்  உள்ளிட்ட மூன்று கிராம மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இந்த வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள்.

இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக புவி தகவலியல் மற்றும் கோளவியல் துறை இயக்குநர் பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறியதாவது:
உலக நாடுகள் வியந்து பார்க்கும் வகையில், இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்து வெற்றி கண்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நிலவின் மேற்பரப்பு இரு பாறை வகைகளை கொண்டது. வசால்ட் எனும் எரிமலைக் குழம்புகளாலானது, மற்றொன்று அனாக்சசைட் என்ற வெண்மை நிற பாறைகளால் ஆனது. நிலவின் தென்துருவம் வெண்மை நிற பாறைகளைக் கொண்டதாகும். அதுபோன்ற மண், பாறை வகைகளைக் கொண்டு விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்தால் தான் சரியாக இருக்கும் என இஸ்ரோ முடிவு செய்தது.

அந்த வகையில், சித்தம்பூண்டி, குன்னமலை ஆகிய பகுதிகளில் இருந்து மண், பாறைகளை 50 டன் அளவில் எடுத்து கனிம பண்பு, வேதியியல் பண்புகளை ஆராய்ந்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தோம்.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் 1959, 1964-ல் நிலவில் இருப்பது போன்ற மண் மாதிரிகளைக கொண்டு ஆராய்ச்சி செய்தது. ஆனால் முழுமையான அளவில் அனாக்சசைட் பாறைகளைக் கொண்டு ஆராய்ச்சிகளை நடத்தவில்லை. 2004-ல் மும்பை ஐஐடியில் நான் பணியாற்றிய போது, சந்திராயன்-1 திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது. சித்தம்பூண்டியில் உள்ள அனாக்சசைட் பாறைகளைக் கொண்டு பரிசோதனை செய்தோம்.

இந்த ஆய்வின்போது, நிலவில் உள்ள வேதியியல் பண்புகளும், சித்தம்பூண்டி மண்ணில் உள்ள வேதியியல், கனிம பண்புகளும் ஒத்துப்போவதாக அப்போதைய சந்திராயன்1 திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். அதன்பிறகு மண் மாதிரிகளை சேகரித்து வழங்கினோம். தமிழகத்தில் ஒட்டன்சத்திரம், திருச்சி, கடவூர் பகுதிகளிலும், ஆந்திரத்திலும், பிற நாடுகளிலும் இந்த மண் வகைகள் இருந்தாலும், நாமக்கல் சித்தம்பூண்டி, குன்னமலையில் உள்ள மண் தான் 90 சதவீத அளவில் நிலவில் விண்கலம் இறங்குவதற்கான ஆய்வுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த அனாக்ச்சைட் பாறைகள் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உண்டு. தற்போது சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளதில், இஸ்ரோவிற்கு அனுப்பிய சித்தம்பூண்டி மண், பாறைகளுக்கும் முக்கிய பங்கு  உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!